தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க ஊதுபத்தி உற்பத்தி பணி தீவிரம்

நடப்பாண்டில் ஊதுபத்தி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது.

ஈரோடு,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க ஊதுபத்தி உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். இதற்காக தீபாவளி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே என்னென்ன பட்டாசுகள் வாங்க வேண்டும். புதுவரவு பட்டாசுகள் எவை என்று பொதுமக்கள் தேட தொடங்கிவிடுவார்கள்.

ஊதுபத்தி உற்பத்தி

இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஆங்காங்கே தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் கடைவீதிகளில் ஜவுளி வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது. போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடிப்பதற்கு முக்கிய தேவையான ஊதுபத்தி உற்பத்தி செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் ஈரோடு கனிராவுத்தர்குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த இஸ்மெயில்- மும்தாஜ் தம்பதி ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஈரோடு, அந்தியூர், அத்தாணி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பட்டாசு வெடிப்பதற்கான ஊதுபத்தியை உற்பத்தி செய்து அனுப்பி வருகின்றோம். வழக்கமாக ஆடி மாதம் தொடக்கத்தில் அதாவது தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்னரே ஊதுபத்தி தயாரிப்பு பணியை தொடங்கிவிடுவோம்.

நாங்கள் சாதாரண மற்றும் வண்ண, வண்ண நிறங்களில் ஊதுபத்தியை உற்பத்தி செய்து வருகிறோம். இதில் மஞ்சள், மெருன், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா என 10-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் ஊதுபத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண ஊதுபத்தி மொத்த விலைக்கு ரூ.4-க்கும், வண்ண ஊதுபத்தி ரூ.6-க்கும் விற்கப்படுகிறது.

மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு

நடப்பாண்டில் ஊதுபத்தி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது. மேலும் போக்குவரத்து செலவும் உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு ஊதுபத்திக்கு 25 காசுகள் அதிகரித்து உள்ளது. இருப்பினும் வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் உற்பத்தி செய்யும் ஊதுபத்தி 2.25 அடி நீள தென்னை குச்சிகளால் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கலாம்.

ஆண்டுதோறும் 70 முதல் 80 ஆயிரம் வரை ஊதுபத்தியை உற்பத்தி செய்கிறோம். தற்போது தீபாவளி நெருங்கி வருகிறது. இதனால் பொது மக்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி எங்களை போன்ற தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT