சிறப்பு ரெயில் 
தமிழக செய்திகள்

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறை

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு இருமார்க்கங்களிலும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த 2 ரெயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-கொல்லம்

அதன்படி சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்:06117) சேவை கடந்த 22-ந் தேதியுடன் நிறுத்தப்பட இருந்தது. இதனை வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற 5, 12-ந் தேதிகளில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சேலத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு வந்தடையும்.

இங்கிருந்து 5.03 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக கொல்லத்திற்கு அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

கொல்லம்-சென்னை எழும்பூர்

மறுமார்க்கத்தில் நேற்று முன்தினத்துடன் நிறுத்தப்பட இருந்த கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (06118) சேவை வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரெயில் வருகிற 6, 13-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, கோட்டயம், எர்ணாகுளம், போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.27 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். கூட்ட நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் பயணங்களை மேற்கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT