சேலம்,
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலின் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் 2 மாதத்திற்கு அதாவது மே மாதம் வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஹூப்ளி- கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) வருகிற ஏப்ரல் 5-ந் தேதி முதல் மே மாதம் 24-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் (8 சேவை) இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு காவேரி, பிரூர், தும்கூர், பெங்களுரூ, கிருஷ்ணராஜபுரம். பங்காருபேட்டை வழியாக சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3.07 மணிக்கு வந்தடையும். அதன்பிறகு ஈரோடு, திருப்பூர், கோவை போத்த னூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 12.55 மணிக்கு சென்றடைகிறது.
அதேபோல், மறுமார்க்கத்தில் கொல்லம்- ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07314) வருகிற ஏப்ரல் 6-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் (8 சேவை) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் கோவை போத்தனூருக்கு அடுத்தநாள் அதிகாலை 1.18 மணிக்கும், திருப்பூருக்கு அதி காலை 2.18 மணிக்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 3.10 மணிக்கும், சேலத்திற்கு அதிகாலை 4.05 மணிக்கும் வந்தடையும். அதன்பிறகு சேலத்தில் இருந்து புறப்பட்டு பங்காருபேட்டை, பெங்களுரூ வழியாக மாலை 6.30 மணிக்கு ஹூப்ளி ரெயில் நிலையத்திற்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. எனவே, இந்த சிறப்பு ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.