சென்னை,
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:-
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான உரிமம், நவ.29 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 28 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட கடைகள் மற்றும் பார்களுக்குப் புதிய அங்கீகார உத்தரவுகளை வழங்க வேண்டும். அரசு கொண்டுவந்துள்ள புதியவிதிமுறைகளின்படி, டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார் அமைக்கவேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் கை கழுவும் வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கடைகள் மற்றும் பார்கள் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும். அனைத்துக் கடைகள் மற்றும் பார்களின் முன்பாகவும் தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டு, அதில் கடை எண், அங்கீகார விவரம், விலைப்பட்டியல் ஆகிய வாசகங்கள் தடித்த எழுத்துகளில் இடம் பெறவேண்டும்.
கடைகளின் தினசரி விற்பனை மற்றும் இருப்பு கணக்குகளை மின்னணு முறையில் பராமரிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மற்றும் பார்களின் பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.