நீலகிரி
உதகை மலை ரெயில் சேவை ரத்து 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மலை ரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற இந்த மலை ரெயிலில் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, குன்னூர், கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த அக்டோபர் 24-ந்தேதி முதல் இன்று (நவம்பர் 1) வரை 9 நாட்களாக ஊட்டி எனப்படும் உதகை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில், மீண்டும் மழையால் மண் சரிவு ஏற்படும் சாத்தியம் போன்றவற்றால், ரெயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மீண்டும் நாளை (நவம்பர் 2) முதல் 4-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலை ரெயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.