சென்னை,
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட்டு நீட்டித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
மேலும், கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பிலும், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பிலும் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.