சிறப்பு ரெயில் 
தமிழக செய்திகள்

சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு!

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-பாட்னா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்,

சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பாட்னா சிறப்பு ரெயில்

பண்டிகை மற்றும் தொடர் பயணங்களால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க் கும் வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா வரை இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06085), இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும். பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறு நாள் சனிக்கிழமை அதிகாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா சென்றடையும்.

மறுமார்க்கம்

இதேபோல், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06086), வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 12.10 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்படும். பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக புதன் கிழமை இரவு 11.08 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கு 11.13 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு மூலம் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பயனடைவார்கள் என்ற தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT