தமிழக செய்திகள்

பதற்றமின்றி, அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

இன்று தொடங்கும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேர் எழுதுகின்றனர். அந்த வகையில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுத உள்ளனர். மேலும், சிறைத்தேர்வர்களாக 281 பேரும் எழுத உள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தவெக தலைவர் விஜய்யும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என்று பதிவிட்டுள்ளார்.