சென்னை,
சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகள் வித்யா (வயது 20). இவர், 12-ம் வகுப்பு முடித்துவிட்டு டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். வித்யா 3 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். 3 முறையும் தோல்வியடைந்தார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த வித்யா, அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்க இருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து அதற்காக தயாராகி வந்தார். ஆனால், கடந்த 3 முறையும் தோல்வியடைந்ததால் விரக்தியில் இருந்த வித்யா, இந்த முறையும் தோல்வியடைந்து விடுவோமா? என்ற பயத்துடனே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வித்யா, தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அபிராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக வித்யா கடந்த 17-ந்தேதி கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை பெற்றோர் காப்பாற்றினர். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், 3 நாள் கழித்து மீண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.