கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி: மன வேதனையில் மாணவி எடுத்த விபரீத முடிவு

கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன வேதனையில் இருந்த மாணவிக்கு பெற்றோர் ஆறுதல் கூறினர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு சுவாதி ஸ்ரீ (17 வயது) என்ற மகள் இருந்தார். இவர், வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில், கணித பாடத்தில் மட்டும் சுவாதி ஸ்ரீ தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறினர். ஆனாலும் தேர்வு தோல்வியில் இருந்து சுவாதி ஸ்ரீயால் மீள முடியவில்லை.

இதையடுத்து அன்றைய தினமே சுவாதி ஸ்ரீ, விவசாயத்துக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் வாந்தி எடுத்த அவர், விஷம் குடித்து விட்டதாக தனது தந்தையிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சுவாதி ஸ்ரீ நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.