சென்னை,
பொய்யான சாதிச் சான்றிதழ் கொடுத்து தனித் தொகுதியில் போட்டியிட்டுள்ளதாக வால்பாறை தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வால்பாறை தனித் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீதரன் என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வரும் சுதாகர், தன்னை இந்து பட்டியலினத்தவர் என பொய்யான சாதிச் சான்றிதழ் வழங்கி தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவருக்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அவரது மறைந்த தந்தை ஆரோக்கியத்தின் உடல் தேவாலய மயானத்தில்தான் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர், இடஒதுக்கீட்டுத் தொகுதியில் போட்டியிடப் பொய்யான சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, வால்பாறை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுதாகரின் விவரங்களை மாநில அளவிலான சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு குழு மற்றும் தேர்தல் ஆணையம் உரிய காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வெண்ணிலா ஆஜராகி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்து, சீக்கிய அல்லது பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர்கள் யாரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்கள். எனவே பொய்யான தகவல்களை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எம்.ஏ. சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம், மாநில அளவிலான சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு குழு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.