தமிழக செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.32 கோடி மோசடி: போலி டாக்டர் கைது

போலியான டி.என்.பி.எஸ்.சி அரசு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார்.

ஆவடி,

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 40). இவரிடம், தூத்துக்குடி மாவட்டம், அத்திரப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர் தான் ஒரு பிரபல டாக்டர் என்றும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவில் சிறப்பு மருத்துவ ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருவதாகவும் கூறி அறிமுகம் ஆனார்.

உதவி பொறியாளர் பணி

மேலும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வாயிலாக பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறி, புதுக்கோட்டையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாக கூறினார்.

அதை உண்மை என்று நம்பிய முகமது இப்ராஹிம், ரூ.32 லட்சத்து 77 ஆயிரத்தை சுரேந்தரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், போலியான டி.என்.பி.எஸ்.சி அரசு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார்.

விசாரணை

முகமது இப்ராஹிம் அதை கொண்டு சென்றபோது அது போலி என்பது தெரியவந்தது. இது பற்றி முகமது இப்ராஹிம் அளித்த புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் சுரேந்தர், டாக்டர் போல் நடித்து முகமது இப்ராஹிம் உள்பட 4 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரத்து 900 பணம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேந்தரை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT