தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீப காலமாக ஒரு பிரபல தனியார் வங்கியின் பெயரில் போலியான Bank Securities என்ற முதலீடு திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடி நடைபெற்று வருகிறது.
இதில், மோசடி செய்பவர்கள் முதலில் பொதுமக்களை வாட்ஸ்அப் குழுக்களில் இணைத்து அதில் அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை குரூப்பில் உள்ள போலி நண்பர்கள் சிலர் வேண்டுமென்றே பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் இதற்கென மோசடியாளர்கள் போலியாக உருவாக்கிய மொபைல் Apps, வங்கி அல்லது முதலீடு தளங்கள் உண்மையான வங்கி சேவை மற்றும் வங்கி செயலி போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு அதில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்துவார்கள். மேலும் இதில் Bank logo, Dashboard, customer support போன்ற வசதிகளும் போலியாக அமைக்கப்பட்டிருக்கும்.
இதனை நம்பி பொதுமக்கள் அதிக லாபம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக முதலீடு செய்து பின்னர் முதலீட்டிற்கான லாபம் அல்லது முதலீடு பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும் போது, மோசடியாளர்கள் கூடுதல் முதலீடு செய்தால்தான் அதற்கும் சேர்த்து அதிக லாபம் கிடைக்கும் என மோசடியை நடத்துகின்றனர்.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு முதலில் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான முதலீடு திட்டங்கள் அல்லது அதிக லாபம் கிடைக்கும் என வரும் விளம்பரங்களை நம்பி அதில் உள்ள லிங்கையோ அல்லது முதலீட்டு தளத்திலோ முதலீடு செய்ய வேண்டாம் மற்றும் SEBI-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்யவும்.
மேலும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நீங்கள் DEMAT கணக்கு வைத்திருக்க வேண்டும். DEMAT கணக்கு இல்லாமலேயே முதலீடு செய்யலாம் என வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் முதலீடு செய்ய வேண்டாம். அதேபோன்று உங்கள் DEMAT கணக்குகளை SEBI-ல் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தளங்களில் மட்டுமே இணைத்து முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் பிரபலமான வங்கி பெயரிலேயோ அல்லது நிதி நிறுவனத்தின் பெயரிலேயோ வாட்ஸ் அப்பில் வரும் முதலீட்டு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் முதலில் அருகிலுள்ள சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாகவோ அல்லது அந்த முதலீடு திட்டத்தின் நம்பகத்தன்மையையோ உறுதிப்படுத்தி விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களில் சிக்கிக் கொண்டால் தயங்காமல் உடனடியாக cybercrime.gov.in இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணிலோ அழைத்து புகாரை பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரின் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மேலும் நிதி இழக்கும் அபாயத்தை இதன் மூலம் தவிர்த்திடலாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.