லால்குடி
திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனுடன் பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. திருச்சியின் லால்குடி மற்றும் காட்டூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியே சென்ற 2 பேர் அந்த ரெயில் முன்பு திடீரென்று பாய்ந்தனர். இதில், பலத்த காயமடைந்து அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிருந்தா சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள போதாவூர் கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 26) மற்றும் திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
புவனேஸ்வரிக்கும், அவரது உறவினரான திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த சிறுவன் ஒரு கல்லூரியில் பட்டய படிப்பு படித்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிறுவன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதேபோல், புவனேஸ்வரி திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா ஆலயத்துக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணக்கால் ரெயில்வே கேட் பகுதிக்கு அவர்கள் வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இதையடுத்து 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் பிருந்தா வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.