தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகலாபுரம் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயி பூலையாத்தேவர் மகன் வெயில்முத்து (வயது 48). இவர் கயத்தாறில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சேர்மத்தாய் என்ற மனைவியும், மல்லிகை மற்றும் முத்துராஜ் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.
வெயில்முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட மோதலால், சேர்மத்தாய் தனது குழந்தைகளுடன் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வெயில்முத்து தனது மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால், மதுப் பழக்கத்தைக் காரணம் காட்டி அவர் வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வெயில்முத்து, நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகியோர் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.