தமிழக செய்திகள்

மகனுடன் குடும்ப தகராறு: விஷம் குடித்து முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கும், அவரது மூத்த மகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே ஏ.எம்.பட்டி பகுதியை சேர்ந்த கொம்பையா மகன் மாரியப்பன் (வயது 75). இவருக்கு மனைவி கருப்பாயி, 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். மாரியப்பன் அதே பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாய தொழில் செய்து செய்து வந்தார்.

சொத்து பிரச்சினை:

இந்த நிலையில் மாரியப்பனுக்கும் அவரது மூத்த மகனான வன்னியபெருமாள் என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமாக தொடர் குடும்பத் தகராறும், கடுமையான வாக்குவாதங்களும் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.

முதியவர் விஷம் குடித்து தற்கொலை:

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த மாரியப்பன் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை எடுத்து திடீரென குடித்துவிட்டார்.

இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.