சென்னை,
இன்றைய நவீன உலகில் சமூக வலைதளங்கள் மனிதர்க ளின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. நண்பர்களுடன் தொடர்புகொள்வது. புதிய நபர்களுடன் அறிமுகமாவது, கருத்துகளை பகிர்வது என பல்வேறு தேவைகளுக்காக இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூக வலைதளங்களை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தும் செயல்களும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
குறிப்பாக, தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவரை பழிவாங்குவது, பெண்களிடம் நெருங்கிப் பழகுவது. குடும்ப உறவுகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களுக்கு போலி சமூக வலைதளக் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியாகக் கணக்குகளை தொடங்குவது, மற்றவர்களிடம் பெண் பேசுவதுபோல் நடிப்பது. தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பெற்று, பின்னர் அவற்றையே ஆயுதமாகப் பயன்படுத்துவது போன்ற விபரீதங்கள் அரங்கேறுகின்றன.
இதற்கு உதாரணமாக, நெய்வேலி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும். அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்ட வாலிபர். புதிய சிம் கார்டு வாங்கி, முன்விரோதம் கொண்ட நபரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை தொடங்கினார்.
தொடர்ந்து, அந்த நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது உறவினர்களுக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் நற்பெ யருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ளார். தனிப்பட்ட முன் விரோதத்தை தீர்த்துக்கொள்ள சமூக வலைதளத்தை பயன்படுத்திய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடலூர் பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கடலூரில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவரிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது கணவரை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்ட வாலிபர் ஒருவர், இளம்பெண் பேசுவதுபோல் நடித்து பழகி வந்துள்ளார்.
அப்போது இருவரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இதில் அந்த வாலிபர் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். பின்னர் அந்த குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை இளம்பெண்ணிடம் காண்பித்து, அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக கூறி நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய இளம்பெண், தனது கணவரிடம் பேசுவதைத் தவிர்த்தார்.
பின்னர் அந்த வாலிபர் வீசிய காம வலையில் சிக்கி அவருடன் நெருங்கிப் பழகினார். மேலும், தனது குழந்தையையும் அந்த வாலிபருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தற்போது பிரிந்து வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இவ்வாறு ஒருவரை பழிவாங்குவதற்கும், மற்றொருவரின் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் போலி சமூக வலைதள கணக்குகள் பயன்படுத்தப்படுவது சமூகத்தில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் உண்மையான அடையாளம் தெரியாமல் அவர்களை நம்புவது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக, தனிப்பட்ட புகைப்படங்கள், குடும்ப விவரங்கள், அந்தரங்க தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பகிர்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். போலி கணக்குகள் மூலம் ஒருவரின் நம்பிக்கையை பெற்று, பின்னர் அதனை பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவது தனிநபரின் நற்பெயரை மட்டுமின்றி குடும்ப உறவுகளையும் சிதைத்துவிடும்.
எனவே, சமூக வலைதளங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். போலி கணக்குகள் மூலம் மிரட்டல், அவதூறு அல்லது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் செயல்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பாதுகாத்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.