சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் (ஏப்ரல் 1ம் தேதி) முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுமார் ரூ.5 முதல் ரூ.100 வரை கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரிய சுமையாக மாறி உள்ளது.
இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சுமார் 3 முதல் 5 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால், கார்களுக்கான கட்டணம் ரூ.5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.40 வரையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னை-கன்னியாகுமரி, திருச்சி-சேலம் மற்றும் சேலம்-கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 60 சுங்கச்சாவடிகள், 60 கி.மீ. நீளமுள்ள வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் நான்கு, மதுரை வெளிவட்டச் சாலையில் இரண்டு, நாவலூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 8 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு (ஏப்ரல் 1ம் தேதி) முதல் அமலுக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் ஆண்டு அட்டவணைப்படி செப்டம்பர் 1-ம் தேதி கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்படும். சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.