தமிழக செய்திகள்

101 வயதை மனைவியுடன் கொண்டாடிய விவசாயி: ஊர் மக்கள் ஆசி பெற்றனர்

விவசாயி தம்பதி குடும்பத்தில் 73 பேர் உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் தேவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 101). இவரது மனைவி ராமலட்சுமி (92). விவசாய தம்பதியான இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 மகன்கள், 2 மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என குடும்பத்தில் 73 பேர் உள்ளனர்.

இந்நிலையில் இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் கோபாலசாமிக்கு 101-வது சதாயுசு விழா கொண்டாடினர். மேலச்செவல் ஆதித்தவர்னேஸ்வரர் கோவிலில் கோபாலசாமி-ராமலட்சுமி தம்பதிக்கு இந்து சமய முறைப்படி சதாயுசு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி ஊர் மக்களும் திரளாக கலந்துகொண்டு மூத்த தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதில் மேலச்செவல் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT