தமிழக செய்திகள்

தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே விவசாயி ஒருவர், தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது, மின்மோட்டாரில் இருந்து வந்த தண்ணீர் வழியாகப் பாய்ந்த மின்சாரம் விவசாயி மீது தாக்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள கோடங்கால், காந்தி வீதித் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 50). விவசாயியான இவர், நேற்று தனது தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது மின்மோட்டாரில் இருந்து தண்ணீர் வழியாக மின்சாரம் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

தண்ணீர் வழியாகப் பாய்ந்த மின்சாரம் காளிமுத்து மீது தாக்கியதில், அவரது இடுப்பு மற்றும் இரண்டு கால் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த காளிமுத்துவுக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். விவசாய தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த காளிமுத்துவின் மறைவு, அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.