தமிழக செய்திகள்

காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்தபோது நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய கோரி திருச்சி சமயபுரம் அருகே விவசாயிகள் கடந்த 15-ந்தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கினார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து ஒரு வேனில் வந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

காத்திருப்பு போராட்டம்- நேற்று 5-வது நாள்

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே விவசாயிகள் கடந்த 15-ந்தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கினார்கள். அவர்களது காத்திருப்பு போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுதாக அறிவிப்பு

நேற்று மதியம் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்தனர். விவசாய சங்க தலைவர்களுடன் அவர்களது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் திடீரென அக்டோபர் 22-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு

இதற்கிடையில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள முனியப்பனூரை சேர்ந்த கந்தசாமி (வயது 73) என்ற விவசாயி ஒரு வேனில் நேற்று திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரிதாபமாக உயரிழந்தார்.

SCROLL FOR NEXT