தமிழக செய்திகள்

தவெக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மணமக்களை வாழ்த்திய அவர், நிகழ்ச்சியில் பேசும்போது தவெக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியது பின்வருமாறு;

”தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என தவெக அரசு கூறுகிறது. வறட்சி நிவாரணம் கோரிய விவசாயிகளுக்கு தவெக அரசு இதுவரை பதில்கூறியதா? விவசாயிகளுக்கு கொடுக்க நிதி இல்லை எனக் கூறும் அரசு, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்க மட்டும் நிதி உள்ளதா?

மக்கள், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு சட்டசபையில் பதில் இல்லை. முதல்-அமைச்சர் பதில் கூறவில்லை. அமைச்சர்கள் சம்பந்தம் இல்லாமல் பதில் கூறுகின்றனர். தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த கேள்விகளுக்கு அரசு கஜானாவை காலியாக்கிவிட்டு சென்றதாக கூறுகின்றனர். பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். தவெக ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.