தமிழக செய்திகள்

கேன்களில் பெட்ரோல்-டீசல் வழங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்பு: விலக்கு அளிக்க வலியுறுத்தல்

யாரோ செய்த தவறுக்காக விவசாயிகள் பாதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டமும் விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்குள்ள தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், மதுக்கரை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல், சின்ன வெங்காயம், நிலக்கடலை, பாக்கு, தக்காளி, காய்கறிகள் உள்ளிட்ட ஏராளமான உணவு பொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கேன்களில் பிடிக்க தடை

இந்த நிலையில் கடந்த மாதத்தில் மத்திய அரசு திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. குற்ற செயல்கள் நடப்பதை தடுக்க பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருட்கள் கேன்களில் வழங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோவை மாநகர பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் யாருக்கும் கேன்களில் பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருட்களை வழங்குவது இல்லை.

இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பெட்ரோல்-டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. புறநகர் பகுதியில்தான் விவசாய நிலம் இருக்கிறது. அங்கு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பெட் ரோல் விற்பனை நிலையங்கள் இருக்கும். அந்த நிலையங்களுக்கு விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் எந்திரங்களை தூக்கிச்சென்று அதில் பெட்ரோல், டீசலை நிரப்பி விவசாயத்துக்கு பயன்படுத்துவது என்பது முடியாத காரியமாக இருக்கிறது.

எனவே மத்திய அரசு திடீரென்று அறிவித்து உள்ள இந்த தடை விவசாயிகளை பெரிதும் பாதித்து உள்ளது. சிறிய எந்தி ரங்களை எல்லாம் எடுத்துச்சென்று அதில் பெட்ரோல், டீசலை நிரப்ப வேண்டும் என்றால் அது முடியாது என்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக்குழு தலைவர் கூறியதாவது:-

விவசாயம் செய்ய டிராக்டர் மிக முக்கியம். அத்துடன் புஸ் கட்டர் என்று அழைக்கப்படும் களை வெட்டும் கருவி, மினி டிராக்டர், மருந்து தெளிப்பான், பவர் வீடர் உள்ளிட்ட எந்திரங்களை பயன்படுத்த கண்டிப்பாக பெட்ரோல்-டீசல் மிக முக்கியம். குறிப்பாக மருந்து தெளிக்கும் கருவிக்கு ஒரு ஏக்கரில் மருந்தை தெளிக்க 2 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும்.

தற்போது எந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் எரிபொருட்களை கேன்களில் கொடுப்பது இல்லை. அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் கருவி, மருந்து தெளிக்கும் கருவி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சாகுபடி செய்யும் விவசாய பொருட்களுக்கு மருந்து அடிக்கவும், களை எடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் சிறு, குறு விவசாயிகள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்து இருப்பார்கள். அந்த அட்டையை காட்டி கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். யாரோ செய்த தவறுக்காக விவசாயிகள் பாதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.