தமிழக செய்திகள்

இலவச விவசாய மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தி 6 மாதமாக காத்திருக்கும் விவசாயிகள்

10 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு விவசாயிகள் விண்ணப்பித்தனர்.

சென்னை,

மின் வாரியத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கு விரைவு தட்கல் திட்டத்தில், திருச்சி மாவட்டத்துக்கு 367 மின் இணைப்புகள் உள்பட தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு, இதற்கான அறிவிப்பு 15.12.2025 அன்று வெளியானது. அறிவிப்பு வெளியான மறுநாளே 10 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு விவசாயிகள் விண்ணப்பித்தனர்.

5 குதிரை திறன் வரை ரூ.2% லட்சம், 5 முதல் 7.5 குதிரை திறன் வரை ரூ.2.75 லட்சமும், 7.5 முதல் 10 குதிரை திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் விவசாயிகள் பணம் செலுத்தினர். பணம் செலுத்தி 6 மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகள் பலருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

காவிரி ஆற்றில் நீர்வரத்தில் அவ்வப்போது தடை ஏற்படுவதால் திருச்சி மாவட்டத்தில் பம்புசெட் மூலம் பாசனம் மேற்கொள்ள திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் செலவில் விவசாயிகள் போர்வெல் அமைத்துள்ளனர். இதனிடையே, தட்கல் திட்டத்தில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின் வாரியம் அறிவித்தவுடன், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தியுள்ளனர்.

ஆனால், பணம் செலுத்தி 6 மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தட்கல் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 367 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 83 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 284 பேருக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.