திருச்சி,
உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது.
இந்நிலையில் தற்போது திடீரென கர்நாடக அரசு காவிரியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டு உள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாது அணை கட்டும் பணியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திருச்சி காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மணல் திட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
குழித்தோண்டி கழுத்தளவு மணலில் புதைந்தும், தூக்குக்கயிறு மாட்டிக் கொண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாகும் நிலையில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். காவிரி ஆற்றின் நடுவில் நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.