தமிழக செய்திகள்

தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தமிழகத்துக்கு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தர வேண்டிய 53 டி.எம்.சி. தண்ணீரை இன்று வரை திறந்து விடவில்லை.

திருச்சி,

உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் மாதம், மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் மத்திய அரசும், கர்நாடகா அரசும் இன்று வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகள்

தமிழகத்துக்கு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தர வேண்டிய 53 டி.எம்.சி. தண்ணீரை இன்று வரை திறந்து விடவில்லை. இதனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முக்கொம்பு காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதன்பின் அவர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்று ஆற்று மணலில் புதைந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.