டி.டி.வி. தினகரன் 
தமிழக செய்திகள்

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்; கண்டும் காணாமல் இருக்கும் தவெக அரசு - டி.டி.வி. தினகரன்

உயிரை கொடுத்து விளைவித்த நெற்பயிர்களும் கருகி காய்ந்து, ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

சென்னை,

காவிரி நீரையும் பெற்றுத்தரவில்லை; விவசாயிகளின் துயரத்தையும் துடைக்கவில்லை - கண்ணீர் வடிக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது தவெக அரசு என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அவல நிலை

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க குளங்களில் தேங்கியிருக்கும் நீரை குடம் குடமாக எடுத்துவந்து வயல்களில் தெளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கான உரிய நீரை கேட்டு பெற திராணியற்ற, மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்க முடியாத குதிரைபேர மாடல் தவெக அரசால், விவசாயிகள் தங்களின் உயிராக கருதும் விளைநிலங்கள் பாலைவனத்தை போல வெடித்து காணப்படுவதோடு, உயிரை கொடுத்து விளைவித்த நெற்பயிர்களும் கருகி காய்ந்து, ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

பல்வேறு சவால்கள்

பொய்த்துப்போன பருவமழை, வறட்சி, இதுவரை இல்லாத அளவிற்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரங்கள் மற்றும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு என பல்வேறு சவால்களையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகுவதை தடுக்குமாறு முறையிட்ட விவசாயிகளிடம், ஸ்பிரே மற்றும் டானிக்கைத் தெளிக்குமாறு அதிகாரிகள் பதில் அளித்திருப்பதாக சொல்லப்படுவது, விவசாயிகளை விவசாயத்தை கைவிட்டுவிட்டு வெளியேற சொல்வதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தின் உரிமை

கர்நாடகத்திடம் காவிரி நீரை கேட்டுப் பெற முடியவில்லை; மேகதாது அணை கட்டும் முயற்சியையும் தடுக்க முடியவில்லை; டெல்டா விவசாயிகளின் கண்ணீரையும் துடைக்க முன்வரவில்லை. இப்படி தமிழகத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் ஒவ்வொன்றாக காவு கொடுத்து கொண்டிருப்பதுதான் தவெக அரசு கொண்டு வந்ததாக கூறும் மாற்றமா?

பயிர்க்கடன் தள்ளுபடி

எனவே, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு இழைத்த துரோகத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகளை மேலும் துயரப்படுத்தாமல், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜயையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT