தூத்துக்குடி,
கடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் திறக்க கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளுக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விடக்கோரி, விவசாயிகள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் நெல்லை - தூத்துக்குடி பிரதான சாலையில் இன்று காலையில் திரண்டு வந்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்குட்பட்ட கடைமடை நிலங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் சரிவர வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி - நெல்லை நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை விலக்கில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, குலையன்கரிசல் விவசாயிகள் சங்கத் தலைவர் ஹேம்நாத் ஜெகன், கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன்மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி மற்றும் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களுடன் சாலைக்கு வந்து அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக, தூத்துக்குடி - நெல்லை பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீர்செய்தனர்.