சென்னை,
சூரிய, காற்றாலை மின்சார திட்டங்களுக்கு விரைவான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க புதிய இணையதளத்தை அமைச்சர் நிர்மல் குமார் அறிமுகப்படுத்தினார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.11.2026) சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், முதலீட்டாளர்களுக்கு எளிமையான, விரைவான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கவும் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை – 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் (Renewable Energy Application Portal) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
அதிகரித்து வரும் சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், உச்சபட்ச மின்தேவை நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பகல்நேர உபரி மின்சாரத்தைச் சேமித்து, அதிக மின்தேவை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் மின்கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த முடியும்.
இதனை கருத்தில் கொண்டு, 2029-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையின்கீழ், தனித்த மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்த சேமிப்புத் திட்டங்கள், மின்பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளுக்கு ஆதரவான திட்டங்கள் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களிலும் கூடுதல் அனுமதியின்றி BESS அமைப்புகளை நிறுவலாம்.
மேலும், 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறுவுதிறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், நிறுவப்பட்ட சூரிய மின்திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத BESS திறன், நான்கு மணி நேர மின்சார வெளியீட்டுத் திறனுடன் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியுடைய BESS திட்டங்கள் வணிகரீதியாகச் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் (Transmission and Wheeling charges) 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களுக்குத் தேவையான மின்கட்டமைப்பு இணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு ஆகியவற்றை அரசு வழங்குவதன் மூலம் தனியார் முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஊக்குவிக்கப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் – ஒற்றைச்சாளர இணையவழி அனுமதி முறை (url: https://nces.tngecl.org/nces/main.php) இதுவரை சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்கள், மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதிக்காக தலைமை அலுவலகத்தில் நேரில் காகித வடிவில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அதன் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருந்தது.
எனவே, அதனை எளிமைப்படுத்தவும், காலதாமதத்தைக் குறைக்கவும், சூரிய மின்சாரம், காற்றாலை, காற்றாலை-சூரிய ஆற்றல் ஒருங்கிணைந்த திட்டங்கள் மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்களுக்கான ஒற்றைச்சாளர இணையவழி விண்ணப்ப வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் திட்டமுனைவோர் பதிவு செய்தல், விண்ணப்பம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல், தொழில்நுட்ப ஆய்வு, மின்சுமை ஓட்டப் பகுப்பாய்வு (Load Flow Study) மற்றும் மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதி பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஒரே தளத்தில் மேற்கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பத்தின் ஒவ்வொரு நிலையும் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவே தெரிவிக்கப்படுகிறது. ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை இணையவழியிலேயே சரிசெய்யவும், அனுமதி ஆணைகளை மின்னணு முறையில் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க முகப்புப் பலகை (Dashboard) மற்றும் இதர தகவல் அறிக்கைகள் (MIS Reports) ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு முக்கிய முன்னெடுப்புகளும் தமிழ்நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு எளிமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கவும் பெரிதும் உதவும்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை செயலாளர்/ மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்தராவ், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் பி.என். ஸ்ரீதர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) ஐ. மெர்சி ரம்யா, மின் பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குநர் சீ. பாலச்சந்தர், மற்றும் மின்வாரிய இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.