நெல்லை,
நெல்லை மாவட்டம் டவுண் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் 52 வயதான பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் அதில் 3வது மகள் டவுணில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தான் பெற்ற மகள் என்றும் பாராமல் தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தாயார் உள்ளிட்ட வீட்டில் உள்ளவர்களிடம் கூறினால் கொன்று விடுவதாக அவர் மாணவியை மிரட்டி வந்துள்ளார்.
இதற்கிடையே, மாணவி படிக்கும் பள்ளிக்கு சமீபத்தில் தமிழக அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சென்று, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக சிங்கப்பெண் அதிரடிப்படையினரை தொடர்பு கொண்டு, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் இன்று அதிகாலை குன்னத்தூர் பகுதிக்கு விரைந்து சென்று, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் அவரது 52 வயது தந்தையை பிடித்தனர். பின்னர் அவரை நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிளம்பிங் தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.