தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முகம்மது கனி (வயது 71). இவரது மகள் ஆயிஷா சித்திக்கா (41). இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக புளியங்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது ஆவணம் எடுத்துவருவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்ற முகம்மது கனி திடீரென விஷம் குடித்தார். பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது மகள் ஆயிஷா சித்திக்காவுக்கும் விஷம் கொடுத்தார். அவர் அதை குடித்துள்ளார்.
இதனால் போலீஸ் நிலையத்தில் மயக்கமடைந்த இருவரும் மீட்கப்பட்டு புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸ்காரர் மருது பாண்டியன், பெண் போலீஸ் தேவி, ஏட்டு சிவா ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.எஸ்.மாதவன் அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், சப்-இன்ஸ்பெக்டர் தீபன் குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.