தமிழக செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்... அடுத்து நடந்த பரபரப்பு

மருமகள் தனது மாமனாருடன் ஒரே இல்லத்தில் வசித்து வந்தார்.

சிவகங்கை,

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 66 வயது முதியவர். இவருக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். இவரது மகனுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதனால் மருமகள் தனது மாமனாருடன் ஒரே இல்லத்தில் வசித்து வந்தார். இதைத்தொடர்ந்து முதியவர் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி மருமகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மாதங்களில் மருமகள் கர்ப்பமானார்.

இதுகுறித்து மாமனாரிடம் அவர் கூறி உள்ளார். அப்போது முதியவர், இந்த விஷயத்தில் என்னை காட்டி கொடுத்துவிடாதே என கெஞ்சியுள்ளார். இதனால் மருமகள் தான் கர்ப்பம் அடைந்ததை அக்கம் பக்கத்தினரிடம் மறைத்து வந்து உள்ளார். இந்த நிலையில் அவர் 7 மாத கர்ப்பமாகி வயிறு பெரிதானதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அதன்பிறகே மருமகள் தன்னை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து மருமகள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.