தமிழக செய்திகள்

திண்டுக்கல் விவசாயி கொலை வழக்கில் தந்தை, தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை

வழக்கு பழனி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

பழனி,

விவசாயியை கொன்ற வழக்கில் தந்தை, தாய், மகனுக்கு ஆயுள் தண்டனைவிதித்து பழனி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விவசாயி கொலை

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள பூலத்தூர் பழைய கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 28). விவசாயி. இவரின் உறவினர் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (26) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமாறன், சுரேந்தர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி பூலத்தூரில் நடந்த கோவில் திருவிழாவின் போது, மணி மாறனுக்கும், சுரேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சுரேந்தர், அவரின் பெற்றோர் முருகன் (50), வீரலட்சுமி (43) ஆகியோர் மணிமாறனை சரமாரியாக தாக்கினர். இதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து சுரேந்தர் மற்றும் அவரின் தந்தை முருகன், தாய் வீரலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். பின்பு இதுதொடர்பான வழக்கு பழனி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை நிறைவு அடைந்ததையடுத்து நேற்று நீதிபதி மலர்விழி தீர்ப்பு அளித்தார். அதில், சுரேந்தர், முருகன், வீரலட்சுமி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT