ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபுதூரை சேர்ந்தவர் தியானேஸ்வரன். இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ (17 வயது) வெள்ளோட்டம்பரப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் சுபஸ்ரீ வீட்டில் இருந்தபோது செல்போன் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருடைய தந்தை தியானேஸ்வரன், அடிக்கடி செல்போனை பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது என்று சுபஸ்ரீயை கண்டித்து உள்ளார். பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
இந்த நிலையில் மதியம் வீட்டுக்கு திரும்பிய தியானேஸ்வரன் வீட்டில் இருந்த இளைய மகளிடம் சுபஸ்ரீ எங்கே என்று கேட்டார். அதற்கு படுக்கை அறைக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து தியானேஸ்வரன் அறையின் கதவை தட்டி பார்த்தார். கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு சுபஸ்ரீ தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே சுபஸ்ரீ உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.