தமிழக செய்திகள்

பலமுறை பாலியல் வன்கொடுமை: மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை - நெல்லை கோர்ட்டு அதிரடி

கடந்த 11 நாட்களுக்கு முன்பே இதே நீதிமன்றத்தில், மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளியாக வசிக்கும் ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை 2024-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குற்றவாளியின் டிஎன்ஏவும், கருவில் உருவான குழந்தையின் டிஎன்ஏவும் தடயவியல் ஆய்வில் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இன்று அளித்த தீர்ப்பில்,

"குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர். சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது. இதே திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம், கடந்த 11 நாட்களுக்கு முன்பு, தனது சொந்த மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, இதுபோன்ற ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT