தமிழக செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதி காலி அறிவிப்பில் அப்பாவு பெயர்: தவறு நடந்ததா? - அரசு விளக்கம்

புதிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதவி ஏற்பதற்கு முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஆனால், 2 தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ந்தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அரசிதழில் இன்று வெளியானது. ஆனால், அந்த அரசிதழில் சபாநாயகர் அப்பாவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, 17-வது சட்டசபையின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் கடந்த 12-ந்தேதி பதவியேற்றார். இந்நிலையில், இன்று வெளியாகி இருக்கும் அரசிதழில் சபாநாயகரின் பெயர் அப்பாவு என்று குறிப்பிடப்பட்டதால், கவனக்குறைவாக இந்த பிழை நிகழ்ந்துவிட்டதா? என பலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இருப்பினும், இது தொடர்பாக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், அப்பாவு பெயர் இடம்பெற்றது கவனக்குறைவாக நிகழ்ந்த தவறு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதவி ஏற்பதற்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்புதான் இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் புதிய சபாநாயகர் பதவி ஏற்காததால், முன்னாள் சபாநாயகரான அப்பாவுவின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.