சென்னை,
ஆட்டோக்களில் புதிய கட்டணத்துக்கு ஏற்ப, மீட்டர்களை திருத்தி அமைத்தால் மட்டுமே. எப்.சி., எனப்படும், தகுதிச் சான்று வழங்கப்படும்' என, தமிழக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
கால அவகாசம்
இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 13 ஆண்டுகளுக்குப் பின், கடந்த மாதம் 28-ந்தேதி முதல், ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, தமிழகம் முழுதும் இயங்கும், 4.20 லட்சம் ஆட்டோக்களின் மீட்டர்களை திருத்தி அமைக்க, 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கூடுதல் தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்தி, மீட்டர் திருத்தும் பணியை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
திருத்தப்பட்ட மீட்டர்
தற்போது ஓடும் பழைய ஆட்டோக்களை தொடர்ந்து இயக்க, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, எப்.சி. எனப்படும் தகுதிச்சான்று பெற வேண்டும். அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும், பழைய ஆட்டோக்களில், புதிய கட்டணத்துடன் திருத்தப்பட்ட மீட்டர், கட்டாயம் இருக்க வேண்டும்.
'மீட்டர் இல்லா விட்டால், எப்.சி., வழங்கக் கூடாது என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட விதிமீறல்களைக் கண்காணிக்க, தமிழகம் முழுதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.