தமிழக செய்திகள்

வெளிநாட்டு நிதி பங்களிப்பு: மசோதாவை திரும்பப்பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டத்திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

* வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் மத்திய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.

* ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது.

* எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.

* இந்த முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாய சட்டத்திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.