கோவை,
கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்படும் அசன பண்டிகை திருவிழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஒரே இடத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் கட்டப்பட்ட நாளான ஆலய பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் இந்த அசன பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் கலைகட்டியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொதுவிருந்து இன்று காலை 11 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது.
இந்த அசன பெருவிருந்திற்காக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பு பணிகள் மும்முரமாக தொடங்கின. இன்று அதிகாலை முதலே பிரம்மாண்ட அண்டாக்களில் தகுந்த சமையல் கலைஞர்களை கொண்டு சுவையான மட்டன் மற்றும் சிக்கன் உணவுகள் தயார் செய்யப்பட்டன. சமைக்கப்பட்ட கறி விருந்தின் மணம் ஒட்டுமொத்த பகுதியையும் சுண்டியிழுத்தது.
விருந்து தொடங்கியதும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏழை, எளிய மக்கள், திருச்சபை உறுப்பினர்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக ஆலய வளாகத்தில் திரண்டனர். எந்தவித சாதி, மத, இன பாகுபாடும் இன்றி ஒரே பந்தியில் அமர்ந்து மக்கள் இந்த மட்டன் மற்றும் சிக்கன் கறி விருந்தை மிகவும் ரசித்து ருசித்து உண்டனர்.
விருந்தில் பங்கேற்ற முதியவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களை சேர்ந்த ஆதரவற்றோர்களுக்கு திருச்சபையினர் இன்முகத்தோடு உணவுகளை பரிமாறினர். ஆலய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த அசன பண்டிகை, கோவையின் மதநல்லிணக்கத்திற்கும், மனிதநேயத்திற்கும் மிக சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாக வந்திருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.