மதுரை,
மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவருடைய மனைவி அஜிதாகுமாரி (50 வயது). மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இவர்களுக்கு சுவேதா, கீர்த்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார். அஜிதாகுமாரி நடத்தி வந்த பள்ளியின் மாடியில் அவரது வீடு உள்ளது. அவருடைய கணவர் முகுந்தன் இறந்துவிட்டதால், 2-வது மகளுடன் வசித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் சுவேதாவுக்கு குழந்தை பிறந்தது. பிரசவ செலவு மற்றும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாயாரிடம் சுவேதா கோபித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவில் இளைய மகள் கீர்த்தி, தனது தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதாகுமாரி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அஜிதாகுமாரி பள்ளி வகுப்பறையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.