சென்னை,
பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகன ஓட்டுநரால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட தற்காலிக பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் வசித்து வருபவர் வினோத் (வயது 40). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 21-ந் தேதி மருத்துவமனை யில் இருந்த ராஜேஸ்வரி மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.
போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தவர் பொன்னேரியை அடுத்த மாதவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. ராஜேஸ்வரிக்கும், பிரகாசுக்கும் கள்ளக்காதல் இருந்தது. கள்ளக்காதலை ராஜேஸ்வரி துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது.
இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரி சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் பொன்னேரி போலீசாரை தாக்கிய நிலையில் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இறந்ததையடுத்து போலீசார் இந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.