சிவகங்கை,
தமிழக அரசு சமூக நலத்துறை சார்பாக 2 பெண் குழந்தைகளை பெற்ற பெண்களுக்கு உதவித்தொகைக்கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை ஆய்வு செய்து மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். இந்நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக காளையார்கோவில் பகுதியை சேர்ந்த சிவா ஆனந்த் என்பவர் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயராணி என்பவரை சந்தித்து உதவித்தொகை கோரி விண்ணப்ப மனுவை கொடுத்துள்ளார்.
இந்த மனுவை ஆய்வு செய்து சிவகங்கையில் உள்ள மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு ரூ.1,000 லஞ்சம் தர வேண்டும் என்று விரிவாக்க அலுவலர் ஜெயராணி கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் தர விரும்பாத சிவா ஆனந்த் இதுகுறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்களது அறிவுறுத்தலின்பேரில் ரசாயன பவுடர் தடவிய ஆயிரம் ரூபாயை காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து விரிவாக்க அலுவலர் ஜெயராணியிடம், சிவா ஆனந்த் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயராணியை கையும், களவுமாக கைது செய்தனர்.