தமிழக செய்திகள்

காசநோய் குறித்த கள ஆய்வுக் கையேடு - அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்

தமிழ்நாடு மாநில அளவிலான காசநோய் இல்லா JOSH அணியை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் காசநோய் ஒழிப்பில் சமுதாயப் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், இளைஞர்களை உள்ளடக்கிய “காசநோய் இல்லா JOSH (JOSH – Joint Squad for Health) அணியை ” மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது காசநோய் குறித்த கள ஆய்வுக் கையேட்டினை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமையில் இன்று (08.10.2026) டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காசநோய் இல்லா JOSH அணி தொடக்க நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு, தமிழ்நாடு மாநில அளவிலான காசநோய் இல்லா JOSH அணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அருண்ராஜ், காசநோய் குறித்த கள ஆய்வுக் கையேட்டினை வெளியிட்டார். பின்னர் கையேடு மற்றும் கள ஆய்விற்கான உபகரணங்களை (Kit) முதல் நிலை அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாநில ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் காசநோய் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

காசநோய் இல்லா JOSH அணியானது, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தோடு இணைந்து, முதல் நிலை அலுவலர்களின் (Class–1) தலைமையில், மை பாரத் (My Bharat) தன்னார்வலர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினரை (NCC) ஒருங்கிணைத்து, காசநோய் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், காசநோயை ஒழிக்க சமுதாயத்தை ஒன்று திரட்டுதல், காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிதல், உரிய பரிந்துரைகளை செய்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்ளும்.

தமிழ்நாட்டில், காசநோய் கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்குதல் போன்ற சேவைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடலூர், தருமபுரி, திருச்சி, தேனி, தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் “காசநோய் இல்லா JOSH அணி” முதற்கட்ட செயல்பாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2,390 கிராம பஞ்சாயத்துகள், தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பின் அடிப்படையில், “காசநோய் இல்லாத பஞ்சாயத்துகளாக” அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “காசநோய் இல்லா பஞ்சாயத்துகளாக” அங்கீகரிக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காசநோய்த் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல், நோயறிதல், சிகிச்சை மற்றும் சமூக ஆதரவை வலுப்படுத்துவதில் பஞ்சாயத்துகள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இப்பஞ்சாயத்துகள் கௌரவிக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு, காசநோய் ஒழிப்பிற்கான அரசின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய மற்றும் ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பை வலுப்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காசநோய் இல்லா தமிழ்நாடு மற்றும் காசநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய, சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் தொடர்ச்சியான சமூகப் பங்களிப்பை வழங்கி, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்நிகழ்வின்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் ச.அனீஷ்சேகர், மாநில காசநோய் அலுவலர் டாக்டர் ஆஷா பிரடரிக், மாநில இளைஞர் நல அலுவலர், மாநில தேசிய மாணவர் படை (NCC) அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மை பாரத் (My Bharat) தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படையினர் (NCC) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT