தமிழக செய்திகள்

அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் நாளை மறுநாள் இடைத்தேர்தல்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. 2 தொகுதிகளிலும் தலைவர்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

நேற்று முன்தினம்

முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 'ரோடு ஷோ' மூலம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் நேற்று முன் தினம் ரோடு ஷோ நடத்தினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து ரோடு ஷோ சென்று பிர சாரம் செய்தார். தாராபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவு திரட்டுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தீவிர பிரசாரம் செய்தார்.

நேற்று

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “5 நிமிடம் பேசினால் அகிலமே ஆடி போய்விடும் என்று பேசிய முதல்-அமைச்சர் விஜய், இன்றைக்கு ஒரு தொகுதியில் வாக்கு வாங்கவே குட்டிக்கரணம் அடிக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அச்சிறுப்பாக்கம் பகுதியில் பிரசாரம் செய்துவிட்டு, மதுராந்தகத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள்? என்றும், டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆக முடியாது” என முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, “கட்சி தலைவர்களுக்கு சோபா, எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி கொடுத்தனர் என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இன்று

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாராபுரம் தொகுதி முழுவதும் இரவு, பகலாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தாராபுரத்தில் பிரசாரம் செய்தனர்.

முதல்-அமைச்சர் 'ரோடு ஷோ'

இந்நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முன்னதாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனைத்து கட்சித்தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்திய பாமாவை ஆதரித்து, முதல்-அமைச்சர் விஜய் ஏற்கனவே பிரசாரம் செய்தார். 2-வது முறையாக இன்று 'ரோடு ஷோ' மூலம் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்றார். பின்னர் தாராபுரத்தில் இருந்து மூலனூர் வரை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு 'ரோடு ஷோ' சென்றார். முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் கோவை சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்ட ரில் காலை 11 மணி அளவில் தாராபுரம் மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு சென்றடைந்தார்.

அங்கிருந்து பிரசார வேனில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடுமலை ரவுண்டானா சந்திப்புக்கு வருகை தந்தார். பின்னர் பெரியார் சிலை சந்திப்பு, 5 சாலைகள் சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதிகளில் 'ரோடு ஷோ' சென்றார். பின்னர் அங்கிருந்து குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோவில் ஆகிய இடங்களில் 'ரோடு ஷோ' மேற்கொண்டார். அதன் பிறகு மீண்டும் அதே வழியில் மாருதி நகர் சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டார்.

முன்னதாக ரோடு ஷோ சென்ற பிரசார வாகனத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவும் உடன் சென்ற நிலையில் அவருக்கு ஆதரவு கேட்டு முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தை காண வழியெங்கும் ஆயிரக்கணக்கான த.வெ.க. கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்தனர். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி தாராபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதன்படி மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 4) மாலை 6 மணி முதல் தேர்தல் நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக இதுகுறித்துத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விதிமுறைகள்

35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101.தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 6.10.2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 04.10.2026 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-

(1) தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

(2) எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும். திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப். முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொது மக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்

(3) பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், எந்தவொரு இசை நிகழ்ச்சி அல்லது எந்தவொரு திரையரங்க செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் எந்தவொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

(4) தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 04.10.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

(5)கல்யாணமண்டபம். சமுதாயக்கூடம். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.

(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 04.10.2026 அன்று மாலை 6.00 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

வாக்குச்சாவடி

(7) சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-

(1) அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்

(ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும்

(iii) தேர்தல் முகவர் அல்லது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம். அவரது பணியாளர்கள்

(iv) மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

(8)வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும். வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்கு சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT