சென்னை,
கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் அண்ணா நகர் அருகே உள்ள பிரபல வணிக வளாகத்தில், ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக, அந்த சிறுமி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துஸ்ரீராமை கைது செய்தார். இதற்கிடையே, பணம் பெற்றுக் கொண்டு ஸ்ரீராம் மீது பொய்யான புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் வசந்தராஜா என்ற போலீஸ்காரர் ஆகிய இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி தரப்பில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், தனது நியாயமான தரப்பு விளக்கத்தை உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.