தமிழக செய்திகள்

18,107 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புங்கள் - எச்.ராஜா

தமிழக உயர்கல்வித்துறை படு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தவெக ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியளித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தமிழக முதல்-அமைச்சரே! உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 18,107 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புங்கள்.

உடனடியாக நிரப்புக

ஆசிரியர் தேர்வுகளில் வெற்றி பெற்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கையில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதில் இந்த அரசுக்கு ஒரு சிக்கலும் இருக்க முடியாது. ஏற்கனவே பெரும்பாலான அரசு பள்ளிகளில் போதுமான கட்டுமான வசதிகளோ, கழிவறை வசதிகளோ இல்லாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு தேவையான கல்வி அளிப்பதிலும் வஞ்சிப்பது என்பது மிகப் பெரிய துரோகம் என்பதனை உணர்ந்து இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் பல்கலைக்கழகங்களில்தான் 67% பேராசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக வைக்கப்பட்டு தமிழக உயர்கல்வித்துறை படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. பள்ளி மாணவர்களின் அடிப்படைக்கல்வி உரிமையினையும் குழி தோண்டிப் புதைத்து விடாமல் உருப்படியாக அவர்களது கல்வியில் அக்கறை செலுத்துவதே முக்கியம் என தமிழக பாஜக திடமாகவும் தீர்மானமாகவும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT