சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ் திரையுலகில் தலைசிறந்த கதையாசிரியர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறன் படைத்த கே.பாக்கியராஜ் இன்று உயிரிழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
இயக்குநர் பாக்கியராஜ் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றி, தனது நடிப்பாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கிராமிய வாழ்க்கையை மையமாக கொண்ட கதையினாலும், இயல்பான நகைச்சுவையினாலும், குடும்ப பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.
ஞானப்பழம், இது நம்ம ஆளு படங்களில் தனது நடிப்பின் மூலம் முற்போக்கு கருத்துக்களையும், விழுமியங்களையும் எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சென்றவர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கியதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் பூர்ணிமா பாக்கியராஜ்க்கும், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.