தமிழக செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணம்: எல். முருகன் இரங்கல்

ஆர்.பி.சவுத்ரி வாகன விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திரைபட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உதய்ப்பூர் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது. திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி வாகன விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனம் கவர்ந்த மற்றும் காலத்திற்கும் நிற்கும் வகையிலான திரைப்படங்கள் வழங்கிய ஆர்.பி. சவுத்ரி அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.