தஞ்சாவூர்,
புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதிஉதவி வழங்கப்படுவதால் புத்த, சமண, சீக்கிய மதத்தினர் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புத்த மதத்திற்கான புனித தலங்களானது பீகாரில் உள்ள புத்த கயா, உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்றவையாகும். சமண மதத்திற்கான புனித தலங்களானது ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில், கர்நாடகாவில் சரவணபெல கோலா போன்றவைகளாகும்.
சீக்கிய மத புனித தலங்களானது பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் கேசகர் சாகிப், தக்ட் டாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஹசூர் சாகிப் (மராட்டியம்), பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா நான்காணா சாகிப், குருத்வாரா சச்சா செளதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா தெஹ்ரா சாகிப் போன்றவைகளாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜனவரி 31-ந் தேதியாகும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.