தமிழக செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கழிவுப்பொருட்களை கொட்டினால் அபராதம்! - கலெக்டர் எச்சரிக்கை

தொடர்ந்து தூய்மை பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இயற்கை வளத்தை மீட்டெடுக்க முடியும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் தனியார் மண்டபத்தில் நேற்று தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்டப உரிமையாளர்கள் மற்றும் தர்ப்பணம் பணிகளில் ஈடுபடும் புரோகிதர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதுடன் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவு பொருட்களை ஆற்றிலும் கரையோரங்களிலும் வீசிவிட்டு செல்லும் நபர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும், தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க தன்னார்வலர்களை நியமித்து, அவர்களுக்கு அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக தர்ப்பணம் மற்றும் பிற வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்களை தொடர்ந்து பணியமர்த்தி, ஆற்றில் கழிவுப்பொருட்களை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.

ஆற்றின் தூய்மையை பாதிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத தொகையை செலுத்த மறுப்பவர்கள் மீது காவல்துறையின் உதவியுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து தாமிரபரணியில் தூய்மை பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இயற்கை வளத்தை மீட்டெடுக்க முடியும். ஆற்றின் இயற்கை வளத்தையும் தூய்மையையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு. எனவே மண்டப உரிமையாளர்கள், தர்ப்பணம் பணிகளில் ஈடுபடுவர்கள், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.